top of page

தம் தம் தம்பி in புத்தகம் பேசியது, January 2010

Writer's picture: Tulika PublishersTulika Publishers

குழந்தைகளுக்கான புத்தகங்கள் என்ற பெயரில் லாரிலாரியாக நீதிக்கதைகளை வாரி வழங்கி வந்த தமிழ்ச்சமூகத்தில் சமீப காலமாக சில அர்த்தமுள்ள முயற்சிகள் நடைபெற்று வருவது ஆறுதல் அளிக்கிறது.ஒரு சில பதிப்பகங்களே இத்தகைய புத்தகங்களைத் தயாரிக்கத்துவங்கி உள்ளன. Books for children பதிப்பகம் இத்திசையில் பல முக்கியமான தப்படிகளை எடுத்து வைத்துள்ளது. அதன் சமீபத்திய வெளியீடான தம் தம் தம்பி புத்தகம் என்கிற 10 சிறு புத்தகங்களின் தொகுதி தமிழில் முதல் முயற்சியாகும். நான்கு வயதை ஒட்டிய குழந்தைகள் வாசித்துப் புழங்குவதற்கான புத்தகங்கள் இவை. எப்போதுமே எந்த ஒரு பொருளையும் பெரியவர்கள் எதற்காக அவற்றைப் பயன்படுத்துகிறார்களோ அதற்காக மட்டுமே குழந்தைகள் பயன்படுத்துவதில்லை. நாற்காலிகள்கார்களாகி வீடே ரோடாகிப் பயணிக்கும். அதே போலப் புத்தகங்கள் வாசிக்க மட்டும்தான் என்று குழந்தைகள் நினைப்பதில்லை. புத்தகத்தை ஒரு குழம்புச் சட்டியாக்கி மூடியைத்திறந்து கரண்டியை உள்ளே விட்டுக் குழம்பு ஊற்றுவதுபோல ஒரு குழந்தை நடிப்பதைப் பார்த்தேன். நம் மூளைக்கு ஒருபோதும் எட்டாத கற்பனை இது. சதுரமான புத்தகத்தை குண்டான ஒரு சட்டியாகக் கூடக் குழந்தையால் மாற்ற முடிகிறதே. இந்தக் குழந்தைகளுக்குப் புத்தகம் எழுதும் அருகதை நமக்கு ஒருபோதும் கிடையாது என்று அந்த நிமிடத்தில் தோன்றியது. அதிலும் பார்க்க அவர்களுக்கு நீதிக்கதைகள் எழுதிய நமக்கெல்லாம் என்ன தண்டனை கொடுத்தாலும் குறைவுதான் என்று நினைத்தேன். தம் தம் தம்பி புத்தகங்கள் என்கிற இவ்வரிசை அந்தக் கொடுமையிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றுகிறது. கட்டைவிரலைப் பதித்து அதில் ஒரு தம்பியையும் உருவாக்கி பத்துப் புத்தகங்களும் பத்துக்கதைகள் சொல்கின்றன. அதில் நீதி என்கிற அயோக்கியத்தனம் புகுத்தப்படவில்லை. கதை என்ற பேரில் பெரிய பிலாக்கணமும் இல்லை. முதல் புத்தகமான 9 லிருந்து 1 வரையில் என்ன கதை இருக்கிறது? 9 சுவர்க்கோழிகள் பேசுகின்றன, 8 எறும்புகள் நடக்கின்றன, 7 குருவிகள் பாடுகின்றன, 6 சிலந்திகள் ஏறுகின்றன, 5 மீன்கள் குதிக்கின்றன, 4 தவளைகள் சிரிக்கின்றன, 3 மலர்கள் தூங்குகின்றன, 2 மாடுகள் அசை போடுகின்றன, 1 பூனை கத்துகிறது 9 சுவர்க்கோழிகள், 8 எறும்புகள், 7 குருவிகள், 6 சிலந்திகள், 5 மீன்கள், 4 தவளைகள், 3 மலர்கள், 2 மாடுகள், 1 பூனை ஆகிய இவர்கள் எல்லோரும் தம்பியும் மழைக்காகக் காத்திருக்கிறார்கள். அவ்வளவுதான் கதை. இதெல்லாம் 12 பக்கங்களில் நடக்கிறது. அப்புறம் இரண்டு பக்கங்கள் குழந்தைகள் தங்கள் கட்டை விரலைப் பதித்து படம் வரைவதற்காக விடப்பட்டுள்ளன. எவ்வளவு முற்போக்கான குழந்தைக்கதை இது என்கிற வரிதான் என் மனசில் முதலில் ஓடியது. எண்களின் வரிசையைக் கதையோடு நினைவில் வைப்பதற்கான சிறந்த புத்தகமாக இது வந்துள்ளது. எல்லாமே தம்பி கதைகள்தானா? இல்லை தங்கி ஒருத்தியும் இருக்கிறாள். உஷ்! என்ற புத்தகத்தில் அவள் தூங்கிக் கொண்டிருக்கிறாள். ஆகவே அந்தப் புத்தகத்தை மெதுவாகப் புரட்டுங்கள். அவள் தூக்கம் கலைந்து விடாமல் நாம் பக்கங்களைப் புரட்ட வேண்டும். கம்பளிப்பூச்சி மெதுவாக ஊர்கிறது. பூனை அவளைப் பார்த்துக் கொட்டாவி விடுகிறது. நாய் மோப்பம் பிடிக்கிறது. சிலந்தி வலை பின்னுகிறது. கதவு கிறீச்சிடுகின்றது. அம்மா யாரிடமோ கிசுகிசுத்துப் பேசுகிறாள். இலை சத்தமின்றிக் கீழே விழுகிறது. இந்தத்தட்டு மட்டும் அறிவில்லாமல் தடதடக்கிறது.உடனே பூனை, சிலந்திப்பூச்சி, நாய் எல்லோருமே உஷ்ஷ்ஷ்.. என்கின்றனர். தம் தம் தங்கி புரண்டு படுத்து மீண்டும் தூங்கி விடுகிறாள். அப்பாடா. அவ்வளவுதான் கதை. இதுபோலப் பத்தும் பத்துவிதமான கதையைச் சொல்கின்றன. பாட்டு, நிலைக்கண்ணாடி, மேலே மேலே, வால், ஹலோ, தங்கி எங்கே, பூ ஆக மொத்தம் பத்துப் புத்தகங்கள். வழவழப்பான தாளில் எல்லாப் பக்கத்திலும் வண்ணமயமான பெரிய படங்கள். ஒரே ஒரு வரி எழுத்து. பத்துப் புத்தகங்களையும் சேர்த்து அழகான ஓர் அட்டைக்குள் அடைத்துக் கச்சிதமாகக் கொடுக்கிறார்கள். 300 ரூபாய்க்கு மேல் விலை வைக்க வேண்டிய இந்தப் புத்தகம் ரூ.150 ரூபாயில் வழங்குகிறார்கள். புத்தக கண்காட்சியை முன்னிட்டு ரூ. 100க்கு கிடைக்கும். துளிகாவும் புக் ஃபார் சில்ரனும் இணைந்து தயாரித்துள்ள இப்புத்தகக் கொத்து வாசிக்கவும் யாருக்கும் வாங்கிக் கொடுக்கவுமான அழகிய பூங்கொத்துதான். - ச. தமிழ்ச்செல்வன் February 17, 2010

留言


Tulika Publishers

Tulika’s imaginatively created children’s books pioneered a fresh wave in Indian publishing way back in 1996.

Check out our award-winning books at www.tulikabooks.com!

Follow us

  • Instagram
  • Facebook
  • Twitter
  • YouTube

Visit us

305 Manickam Avenue,

Off TTK Road, Alwarpet,
Chennai – 600018,
Tamil Nadu, India

Call us

+91 (044) 2499 1639 / 1407 / 1428

Write to us

reachus@tulikabooks.com

bottom of page